பெய்ஜிங்: விண்வெளி நிலைய கட்டுமானத்திற்காக அனுப்பப்பட்டிருக்கும் சீன வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டு முதற்கட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி விண்வெளி நிலைய கட்டுமான பணிக்காக லியு போமிங், டாங் ஹோங்போ மற்றும் நை ஹைஷெங் ஆகிய மூன்று வீரர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தியான்ஹே எனப்படும் நிலையத்தை சென்றடைந்த அவர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் வெளிப்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ரோபோ கரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக லியு போமிங், டாங் ஹோங்போ ஆகிய வீரர்கள் நிலையத்தின் மைய பகுதியில் இருந்து வெளியேறி விண்வெளியில் நடந்தனர். விண்வெளி நடைப் பயணத்திற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்தபடி வெளியே வந்த சீன வீரர்கள், ரோபோ கரத்தை பொருத்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இன்னும் சில நாட்களில் ரோபோ கரம் முழு அளவில் செயல்பட தொடங்கிவிடும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சீன வடிவமைப்பாளர் லியாங் சாங்சன் தெரிவித்திருப்பதாவது, இது ரோபோ கரத்தின் முழுக்கை பகுதி போன்றது. மத்திய பகுதியை கட்டுப்படுத்தும் ஒரு இணைப்பும் இதில் இருக்கிறது. இந்த பகுதி தான் ரோபோ கரத்தினை கட்டுப்படுத்தும் மூளை எனலாம். ரோபோ கரத்தின் அசைவுகள் மற்றும் தரவுகள் மாற்றம் ஆகிய இரண்டையும் இதுதான் கட்டுப்படுத்தும் என குறிப்பிட்டார்.