சென்னை: சென்னை அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர், திருமங்கலம் உட்பட 5 சிக்னல்களில் மொத்தம் 57 அதிநவீன ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டது. வாகனத்தை வேகமாக இயக்கினாலும், ஸ்டாப் லைனை தாண்டினாலும், சிவப்பு சிக்னலை மீறினாலும், எதிர்திசையில் வாகனத்தை இயக்கினாலும் உடனடியாக அந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து தேசிய தகவல் தொழில் நுட்பத்தின் சர்வருக்கு அனுப்பி, சம்மந்தப்பட்ட உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு 10 நொடிகளில் நோட்டீஸ் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது.அதன்படி கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை போக்குவரத்தை கண்காணித்து வந்த நிலையில் விதிகளை மீறியதாக 10,905 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக போக்குவரத்து காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 1ம் தேதி சிக்னல் விதிகளை மீறியதாக 4,513 பேருக்கும், ஸ்டாப்லைன் தாண்டியதாக 386 பேருக்கும், எதிர்திசையில் வண்டியை இயக்கியதாக 48 பேர் என மொத்தம் 4,951 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைப்போன்று இரண்டாவது நாளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டியதாக 42 பேர் மீதும், ஸ்டாப் லைன் தாண்டியதாக 387 பேர் மீதும், சிவப்பு சிக்னலை மீறியதாக 5,538 என மொத்தம் 5,964 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏ.என்.பி.ஆர் கேமராவில் இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 28,226 வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதில் பழுதடைந்த நம்பர் பிளேட், வாகனம் வேறு உரிமையாளர் பெயரில் ஓடுவது என 17,321 பேரும், மீதமுள்ள 10,905 பேருக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.