ஸ்கிராப் ஏலத்தில் ரூ.4,575 கோடி வருமானம் பயணிகள் ரயிலால் ஏற்பட்ட நஷ்டத்தை பழைய பொருட்களில் பிடித்தது ரயில்வே

2021-07-05@ 00:15:45

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரயில்வே நிர்வாகம், பழைய பொருட்களை விற்றதின் மூலம் ரூ.4,575 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய வருவாய் இழைப்பை சந்தித்து வருகிறது. ஊரடங்கால் பயணிகள், சரக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதும், புலன் பெயர் தொழிலாளர்களுக்கான இலவச சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதும் இதற்கு முக்கிய முக்கிய காரணம். இந்நிலையில், தன்னிடம் இருந்து உலோக கழிவுப் பொருட்களை (ஸ்கிராப்) விற்றதின் மூலம் ரயில்வேக்கு ரூ.4,575 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரயில்வேயில் புதிய ரயில் பாதைகள் அமைப்பது, பழைய ரயில் தண்டவாளங்களை மாற்றி விட்டு புதிய பாதைகள் அமைப்பது, பழைய கட்டிடங்களில் இருந்து உடைக்கப்படும் உலோகப் பொருட்கள், பழைய ரயில் இன்ஜின்கள், பெட்டிகள், பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ள டீசல் ரயில் இன்ஜின்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் மின்னணு ஏலம் மூலமாக ரயில்வே நிர்வாகம் ஏலம் விட்டு வருகிறது. கடந்த 2019-2020ம் ஆண்டில் இந்த ஏலத்தின் மூலம் 4,333 கோடி வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 2020-2021 ஆண்டுக்கான ஏலம் கடந்த மாதம் 20ம் தேதி நடத்தப்பட்டது. இதன்மூலம், ரூ.4,575 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டு கிடைத்ததை விட ரூ.242 கோடி அதிகமாகும். இதற்கு முன்பு, 2010-2011ல் ரூ.4,409 கோடிக்கு விற்கப்பட்டதே அதிகப்பட்ச தொகையாக இருந்து வந்துள்ளது.