தீப்பிடித்த சிலிண்டரை அணைத்த காவலர்

2021-07-05@ 01:15:10

அண்ணாநகர்: அமைந்தகரை, எம்.எம் காலனியை சேர்ந்தவர் யோகேஸ்வரி (19). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் காஸ் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, காஸ் கசிவால் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதுபற்றி உடனே அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தலைமை காவலர் சரவணன் விரைந்து வந்து, தனது உயிரை பொருட்படுத்தாமல் வீட்டிற்கு சென்று எரிந்து கொண்டிருந்த காஸ் சிலிண்டரை வெளியே இழுத்து வந்து, அதன் மீது ஈரத்துணிகளை போட்டு தீயை அணைத்தார். இதனால், அங்கு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவசர காலத்தில் துணிந்து பணியாற்றிய காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:

தீ சிலிண்டர் காவலர்