செங்கல்பட்டு: தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆங்காங்கே குட்கா பொருட்கள் விற்பனையாகி வருவதை தடுக்க காவல்துறை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மார்க்கெட் அருகே சின்னம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு சென்று சோதனை நடத்தி, பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பசுபதி (45) என்பவரை கைது செய்தனர். கடந்த 4 மாதத்திற்கு பசுபதி, இதேபோல் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களுடன் கைது செய்யட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.