தீரத் ராஜினாமாவை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராக புஷ்கர் தேர்வு: இன்று பதவியேற்பு

2021-07-04@ 00:14:23

டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதன் முதல்வராக திரேந்திர சிங் ராவத் பல்வேறு காரணங்களால் 4 மாதங்களுக்கு முன் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். இவர் அரசியலமைப்பு சட்டப்படி 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த கெடு செப்டம்பர் 10ம் தேதி முடிகிறது. இம்மாநிலத்தில் கங்கோத்ரி, ஹல்த்வானி சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த போதிலும், இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு முடிகிறது.

இதனால், அங்கு புதிதாக தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் பதவியில் நீடிப்பதை தீரத் சிங் விரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யாவை சந்தித்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மேலிடப் பார்வையாளராக ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், உத்தரகாண்டின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர், ஆளுநரை சந்தித்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

* இளம் முதல்வர்
உத்தரகாண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தின் காதிமா தொகுதியில் இருந்து புஷ்கர் சிங் தாமி 2 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான பகத் சிங் கோஷ்யாரிக்கு நெருக்கமானவர். இவருக்கு வயது 45. இதன்மூலம், இம்மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

* ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘உத்தரகாண்ட் மாநில மக்களை பாஜ ஏமாற்றி விட்டது. பிரதமர் மோடியும், பாஜ தலைவர் ஜேபி நட்டாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பாஜவின் பதவி மோகம், அரசியல் நிலையற்ற தன்மை, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது, தலைமை  தோல்வி ஆகியவற்றுக்கு இந்த முதல்வர் மாற்ற சம்பவம் ஒரு உதாரணம். உத்தரகாண்ட் மக்களுக்கு சேவை செய்யாமல் பதவியை பகிர்ந்தளிக்க முயற்சித்து வருகின்றனர். இதன்மூலம், மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைத்து வருகின்றனர்” என்றார்.