மிகவும் ஆபத்தான கட்டத்தில் உலகம் டெல்டா வைரஸ் மேலும் உருமாறும்: எந்த நாடும் தப்பிக்க முடியாது

2021-07-04@ 00:54:44

ஜெனீவா: டெல்டா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருப்பதால் உலக நாடுகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் உருவானதில் இருந்து தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகின்றது. இதில், தற்போது பரவத் தொடங்கியிருக்கும் டெல்டா வைரஸ் அதிக பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்களை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்தி வருகின்றது. டெல்டா வைரஸ் தொடர்பாக உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு தற்போது எச்சரித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் அதானம்  நேற்று அளித்த பேட்டி வருமாறு:

டெல்டா வைரஸ் வகைகள் தொடர்ந்து உருமாறிக் கொண்டேதான் இருக்கும். இதனால், உலகம் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் பயங்கரமான காட்சிகள் தற்போது மீண்டும் வழக்கமாகி வருகிறது. தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வரும் டெல்டா வகை வைரஸ்கள் பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நோய் தொற்றின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாம் இருக்கிறோம். எந்த நாடும் அதில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை.  டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தானது. அது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகின்றது. அதில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது. இதுவரை 98 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. மிகவும் குறைவான மற்றும் அதிகம் தடுப்பூசி போடாத நாடுகளில் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் போன்ற வலுவான கண்காணிப்புக்கள், பரிசோதனைகள், முன்கூட்டியே பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து மோசமாக உள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமான இடங்களை தவிர்த்தல், தங்கியிருக்கும் இடங்களை காற்றோட்டமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். ஆக்சிஜன், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி உள்ளிட்டவற்றை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இணைந்து பணியாற்றுவதை அடுத்தாண்டு வரை உறுதி செய்ய வேண்டும். மருந்து நிறுவனங்கள் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய உற்பத்தியை வேகப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:

உலகம் டெல்டா வைரஸ் WHO