பாடம்
2021-06-30@ 01:50:17

அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஆனி சிவாவின் வெற்றிக்கதை. காதல் பெயரில் சிதைந்த வாழ்க்கையை கல்வியின் பெயரில் சரிசெய்த வெற்றி மங்கை. கைக்குழந்தையுடன் கைவிடப்பட்டாலும் தளராத தன்னம்பிக்கையுடன் அவர் வாழ்க்கையில் படித்து வெற்றி பெற்று இருக்கிறார். இன்று ஒரே நாளில் வைரல் மங்கையாக மாறி இருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த ஆனிசிவாவுக்கு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போதே காதல். பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்தது திருமணம். 2009ல் ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த 6 மாதத்தில் காதல் கணவர் பிரிந்து சென்று விட்டார். தவித்துப்போன அவரை பெற்றோரும் ஏற்கவில்லை. உற்றாரும் அரவணைக்கவில்லை. அதிர்ந்து போன அவர் நம்பிக்கையை கைவிடவில்லை. கைக்குழந்தையுடன் வீதியில் இறங்கி குடிசையில் தஞ்சம் அடைந்தார். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் அவரை தொற்றிக்கொண்டது.
கிடைத்த வேலைகளை செய்து பணம் சம்பாதித்ததுடன், படிப்பையும் தொடர்ந்தார். கல்லூரி படிப்பை முடித்த உடன் அரசு வேலை தான் வறுமையை துரத்தும், வாழ்க்கையை வளப்படுத்தும் என்பதை உணர்ந்தார். தொடர்ந்து போட்டித்தேர்வுகள் எழுதி முழு முயற்சியுடன் அதில் வெற்றி பெற்று சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பயிற்சி முடித்த அவருக்கு சொந்த ஊரான வர்க்கலாவில் பதவி. ஆனால் மகன் கொச்சியில் படித்து வருவதால் எர்ணாகுளத்துக்கு இடம் மாற்றம் கேட்டு தற்போது அங்கேயே சப்- இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்துள்ளார். இளம் வயதில் காதலன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்ததும், ஆனி சிவா தோற்றுவிடவில்லை. வாழ்க்கையில் ஒரு தகுதியான இடத்திற்கு செல்ல அவருக்கு கிட்டத்தட்ட 11 வருட போராட்டம் தேவைப்பட்டு இருக்கிறது.
ஆனால் அவர் தளர்ந்து விடவில்லை. அந்த போராட்டத்தின் இறுதியில் அவர் உறுதியான வெற்றி பெற்று முன்மாதிரி பெண்ணாக உயர்ந்து இருக்கிறார். இன்றைய கொரோனா சூழலில் ஆனி சிவாவின் வெற்றி அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக்கூடியது. தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமிகள் ஏராளம். அவர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டியுள்ளார். பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதோடு பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்து நம்பிக்கை அளித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனவே கொரோனா இழப்புகளை கடந்து வர ஆனி சிவாவை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் வெற்றி பெற வேண்டும்.
வாழ்க்கையை புரட்டிப்போடக்கூடியது கல்வி மட்டுமே. அது மட்டுமே வெற்றியை கொடுக்கக்கூடியது. கற்ற கல்வியால் எப்போதும், எந்த சூழலிலும் மதிப்பு தான். உத்வேகத்துடன் போராடினால் எந்த சூழலிலிலும் கல்வியின் உதவியுடன் வெற்றியை எட்டமுடியும் என்பதற்கு ஆனிசிவா வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம்.