ஷிவானிகுமாருக்கு வயது 19தான். ஆனாலும் காலம் கடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்.

அவரின் குடும்பம் நான்கு வருடங்களுக்கு திருமணப் பேச்சு எடுக்காதபடி எப்படியோ சமாளித்துவிட்டார். அத்தகைய வாய்ப்பு ரொம்ப காலம் நீடிக்காது. “எத்தனை காலத்துக்கு அவர்களை தடுக்க முடியுமென எனக்கு தெரியவில்லை,” என்கிறார் அவர். “என்றோ ஒருநாள் இது முடிவுக்கு வர வேண்டும்.”

பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்திலுள்ள அவரின் கங்சாராகிராமத்தில் பெண்கள் வழக்கமாக பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வார்கள். 17, 18 வயதுகளிலேயே திருமணம் நடந்துவிடும்.

ஷிவானி (எல்ல பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன) எப்படியோ தாக்குப்பிடித்து விட்டார்.  இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரிக்கு செல்வது அவரின் விருப்பங்களில் ஒன்று. ஆனால் தனியாக இருக்க வேண்டியிருக்கும் என அவர் யோசித்திருக்கவில்லை. “என்னுடைய தோழிகள் அனைவரும் திருமணம் செய்துவிட்டார்கள். என்னுடன் வளர்ந்த, பள்ளிக்கு வந்த பெண்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள்,” என்கிறார் அவர். சொந்த வீட்டிலிருந்து வெளிப்படையாக பேச முடியாதென்பதால் அண்டை வீட்டிலிருந்து ஒரு மதியவேளையில் பேசினார். அங்குமே வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆடுகள் ஓய்வெடுக்கும் பகுதியிலிருந்துதான் பேசினார். “கொரோனா வந்த சமயத்தில், என்னுடைய கடைசி தோழியும் திருமணம் செய்துவிட்டார்,” என்கிறார் அவர்.

ஷிவானியின் சமூகத்தில் மிக அரிதாகவே கல்லூரி சென்று படிக்கும் வாய்ப்பு  பெண்களுக்கு கிடைப்பதாக சொல்கிறார். ரவிதாஸ் என்கிற (சமர் சாதியின் உட்பிரிவு ) மகாதலித்  சமூகத்தை சேர்ந்தவர். மகாதலித் என்பது 2007ம் ஆண்டு பிகார் அரசால் மிகவும் ஆதாயமற்ற 21 பட்டியல் சாதிய சமூகங்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுப்பெயர் ஆகும்.

மணம் முடிக்கவில்லை என சமூகம் கற்பிக்கும் களங்கமும் குடும்பத்தினர், அண்டை வீட்டார் போன்றோர் கொடுக்கும் தொடர் அழுத்தமும் அவரின் தனிமையை சுற்றி சுவராக எழும்பிக் கொண்டிருந்தது. “நான் படித்தது போதும் என்கிறார் என் தந்தை. ஆனால் நான் ஒரு காவல்துறை அதிகாரியாக விரும்புகிறேன். எனக்கு லட்சியம் இருக்குமென்று கூட அவர் யோசிக்கவில்லை. படித்துக் கொண்டே இருந்தால், யார் என்னை கட்டுவார் எனக் கேட்கிறார்,” என்கிறார் அவர். “எங்களின் சமூகத்தில் உள்ள ஆண்கள் கூட சீக்கிரமே திருமணம் செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் விட்டுவிடலாமா என்று கூட யோசிப்பேன். ஆனால் இத்தனை தூரம் வந்தபிறகு, என் கனவை அடையவே நான் விரும்புகிறேன்.”

PHOTO • Amruta Byatnal
PHOTO • Antara Raman

ஷிவானிகுமார் (இடது: தாய் மீனா தேவியுடன்), “சில நேரங்களின் நான் விட்டுவிடலாமா என்று கூட யோசிக்கிறேன்,” என்கிறார்

ஷிவானி படிக்கும் சமஸ்டிப்பூரின் கேஎஸ்ஆர் கல்லூரி கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அவர் நடந்து போய், பேருந்து பிடித்து பிறகு ஒரு ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றடைய வேண்டும். சில நேரங்களில் அவரின் கல்லூரியில் படிக்கும் ஆண்கள் தங்களின் பைக்குகளில் கொண்டு அவரை கொண்டு சென்று விட கேட்பதுண்டு. யாரேனும் பார்த்துவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகளின் அச்சத்தால் அவர் மறுத்துவிடுகிறார். “கிராமத்தில் இருப்போர் இரக்கமே இல்லாமல் கதை கட்டி விடுவார்கள். என்னுடைய தோழி ஒருவரை பள்ளியில் படிக்கும் ஒருவருடன் பார்த்ததுமே அவரை திருமணம் செய்து விட்டனர். நான் பட்டம் பெறுவதற்கும் காவல்துறை அதிகாரியாவதற்கும் இடையே அப்படியொரு விஷயம் நடந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறேன்,” என்கிறார் அவர்.

ஷிவானியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து மாதத்துக்கு 10000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அவரின் தாயான 42 வயது மீனா தேவி ஐந்து குழந்தைகளை பற்றி கவலைப்படுகிறார். 13, 17 வயதுகளில் இரண்டு மகன்களும் 10, 15, 19 வயதுகளில் மூன்று மகள்களும் இருக்கின்றனர். “என்னுடைய குழந்தைகளை பற்றி தினமும் கவலைப்படுகிறேன். என் மகள்களுக்கு வரதட்சணை சேர்க்க வேண்டும்,” என்கிறார் மீனா தேவி. ஒரு பெரிய வீடு கட்டவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர்களின் செங்கல் வீடு ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் ஒரே ஒரு படுக்கையறையையும் கொண்டது. மூன்று அண்டை குடும்பங்களுடன் சேர்த்து அவர்களுக்கு ஒரு பொது கழிவறை.  “வீட்டுக்கு வரும் மருமகள்கள் வசதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும்,” என்கிறார் அவர். இவற்றுக்கு நடுவே கல்வி பயிலுவது மிகக் குறைவான முக்கியத்துவத்தையே கொண்டிருந்தது. ஷிவானியின் உறுதி மட்டுமே கல்லூரிக்கு அவரை செல்ல வைத்திருக்கிறது.

பள்ளிக்கு செல்லாத மீனா தேவி மட்டும்தான் ஷிவானியின் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பவர். “பிற பெண் காவலர்களை பார்த்து அவர்களில் ஒருவராக வேண்டுமென அவர் விரும்புகிறார். நான் எப்படி தடுக்க முடியும்?” எனக் கேட்கிறார். “தாயாக எனக்கும் (அவர் காவலரானால்) பெருமைதான். ஆனால் அனைவரும் அவரை சீண்டுகிறார்கள். அதை பார்க்கும்போதுதான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.”

சில பெண்களை சீண்டுவதை கிராமம் நிறுத்துவதே இல்லை.

17 வயது நேகாகுமாரியின் குடும்பத்தில் திருமணத்துக்கு மறுப்பு சொன்னால் அடி விழுகிறது. “திருமணம் செய்யக் கேட்டு நான் வேண்டாமென சொல்லும் ஒவ்வொரு முறையும் என் தந்தை கோபமடைந்து தாயை அடிப்பார். என்னால் என் தாய்க்குதான் அதிக துயரம்,” என்கிறார் அவர், ஒரு சிறிய அறைக்குள்ளிருந்து. கூடப் பிறந்தவர்களுடன் அவர் இருக்கும் அறை அது. வெளியே இருக்கும் அறையில் தந்தை மதியவேளையில் இளைப்பாறுவார். அறையின் ஒரு மூலை நேகா படிப்பதற்கான இடமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய பாடப்புத்தங்களை தொடக் கூட எவருக்கும் அனுமதியில்லை என்கிறார் புன்னகைத்தபடி.

அடி வாங்குவது சின்ன விஷயம்தான் என்கிறார் அவரின் தாய் நைனா தேவி. நேகாவின் கல்லூரி படிப்புக்காக நகையைக் கூட விற்க அவர் யோசித்திருக்கிறர். “அவர் படிக்காமல் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டால், விஷம் குடித்து இறந்துவிடுவேனென சொல்கிறார்.  அதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது?” எனக் கேட்கும் 39 வயது நைனா தேவிதான் குடும்பத்தில் சம்பாதிப்பவர். 2017ம் ஆண்டு நேர்ந்த விபத்தில் ஒரு காலை இழந்ததிலிருந்து அவரின் கணவர் விவசாயக் கூலி வேலை செய்வதை நிறுத்தினார். அது புயா என்னும் சமூகத்தை சேர்ந்த குடும்பம். அதுவும் ஒரு மகாதலித் சாதிதான். விவசாயக் கூலி வேலை பார்த்து மாதந்தோரும் நைனா சம்பாதிக்கும் 5000 ரூபாய் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என்கிறார் அவர். உறவினர்களிடம் உதவிகள் வாங்கி குடும்பத்தை ஓட்டுகின்றனர்.

PHOTO • Amruta Byatnal

நேகாகுமாரி மற்றும் நைனா தேவியின் குடும்பத்தில் திருமணத்தை எதிர்ப்பது அடியை வாங்கிக் கொடுக்கிறது.

அடி வாங்குவது சின்ன விஷயம்தான் என்கிறார் அவரின் தாய் நைனா தேவி. நேகாவின் கல்லூரி படிப்புக்காக நகையைக் கூட விற்க அவர் யோசித்திருக்கிறர். “அவர் படிக்காமல் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டால், விஷம் குடித்து இறந்துவிடுவேனென சொல்கிறார்.  அதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது?” எனக் கேட்கிறார்

நேகா 12ம் வகுப்பு படிக்கிறார். பாட்னாவில் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டுமென்பதே அவருக்கு கனவு. “என் குடும்பத்தை சேர்ந்த எவருமே அலுவலகத்தில் வேலை பார்த்ததில்லை. அதை முதலில் நான்தான் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.  அவருடைய அக்கா 17 வயதிலேயே திருமணம் செய்து 22 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். அவருடைய சகோதரர்களுக்கு 19 மற்றும் 15 வயது ஆகிறது. “என்  அக்காவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால் அவருடைய வாழ்க்கையை போல் எனக்கு கிடைத்துவிடக் கூடாது,” என்கிறார் நேகா.

கங்க்சாரா கிராமத்தில் நேகா படிக்கும் பள்ளி 12ம் வகுப்பு வரை கொண்டிருக்கிறது. சராய்ரஞ்சன் தாலுகாவில் இடம்பெற்றிருக்கும் கங்க்சாரா கிராமத்தில் 6,868 பேர் வசிக்கின்றனர். நேகாவின் வகுப்பறையில் வெறும் ஆறு மாணவிகளும் 12 மாணவர்களும்தான் படிப்பதாக சொல்கிறார் அவர். “எட்டாம் வகுப்புக்கு பிறகு மாணவிகளின் எண்ணிக்கை பள்ளியில் மெதுவாக குறையத் தொடங்கியது,” என்கிறார் நேகா படிக்கும் பள்ளியின் ஆசிரியர் அனில் குமார். “அதற்கு காரணம் சில நேரங்களில் அவர்களை வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். சில நேரங்களில் திருமணம் செய்துவிடுகிறார்கள்.”

பிகாரில் 42.5 சதவிகித பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது நாட்டின் சட்டப்பூர்வமான ( குழந்தை திருமண தடுப்புச் சட்ட த்தின்படி) திருமண வயதுக்கு முன்பே. இந்த அளவு, இந்தியா முழுமைக்கும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ( NFHS-4, 2015-16 ) வழங்கியிருக்கும் 26.8 சதவிகிதத்தை காட்டிலும் அதிகம். சமஸ்டிப்பூரில் எண்ணிக்கை இன்னும் அதிகமாக 52.3 சதவிகித அளவில் இருக்கிறது.

இதன் விளைவுகள் நேகா மற்றும் ஷிவானி போன்ற பெண்களின் கல்வியை பாதிப்பதோடு மட்டுமின்றி பல மட்டங்களில் இருக்கிறது. “பிகாரில் கடந்த வருடங்களில் குழந்தைப் பேறு குறைந்திருப்பதை (NFHS 2019-20-ன்படி, 2005-06ல் இருந்த 4லிருந்து 2015-16ல் 3.4 ஆக குறைந்து 3 ஆகியிருக்கிறது) காண முடியும். இளம்வயதில் திருமணம் செய்யும் குழந்தைகள் ஏழ்மையிலும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும் இருக்கும் வாய்ப்புகள்  உண்டு. சுகாதார சேவைகளிலிருந்து விலக்கி வைக்கவும் படுவார்கள்,” என்கிறார் தில்லியின் சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் பூர்ணிமா மோகன். கல்வி, குழந்தை திருமணம், பெண்களின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளை ஆய்வு செய்திருக்கிறார் இவர்.

பள்ளிக்கும் திருமணத்துக்கும் இடையே, பிரசவங்களுக்கு இடையே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். “பெண் குழந்தைகளின் வாழ்க்கைகளில் நேரும் மாற்றங்களுக்கு போதுமான இடைவெளிகளை நாம் தர வேண்டும்,” என்கிறார் அவர். “பெண் குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருக்கும்போதே இதை தொடங்க வேண்டும்.” பண ரீதியிலான திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுக்கான ஊக்கத் தொகை முதலியவற்றை கொண்டு தேவையான அளவுக்கு தாமதத்தை உருவாக்கி, பெண்கள் அவர்களின் இலக்குகளை அடையும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும் என நம்புகிறார் பூர்ணிமா.

“பெண் குழந்தைகளின் திருமணம் தாமதப்படுத்தப்பட்டால், அவர்களால் நன்றாக படிக்க முடியுமென்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியுமென்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் சமஸ்டிப்பூரின் சராய்ரஞ்சன் தாலுகாவில் பணிபுரியும் ஜவஹர் ஜோதி விகாஸ் கேந்த்ரா என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் கிரண் குமாரி. பல குழந்தை திருமணங்களை குமாரி தடுத்திருக்கிறார். பெண் குழந்தைகளின் விருப்பத்துக்காக திருமணத்தை தாமதப்படுத்த குடும்ப உறுப்பினர்களிடம் பேசி ஒப்புக் கொள்ளவும் வைத்திருக்கிறார். ”எங்களின் வேலை குழந்தை திருமணங்களை நிறுத்துவதோடு நின்று விடுவதில்லை,” என்கிறார் அவர். ”பெண் குழந்தைகளுக்கு உத்வேகமூட்டி படிக்க வைப்பதும் அவர்கள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வைப்பதுமே எங்களின் இலக்கு.”

PHOTO • Amruta Byatnal
PHOTO • Antara Raman

ஒவ்வொரு முறையும் பெற்றோரை காத்திருக்கச் சொல்வதில் கவுரி வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் மே 2020ல் அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை

ஆனால் பெருந்தொற்றுக்கான ஊரடங்கு மார்ச் 2020ல் தொடங்கியதிலிருந்து பெற்றோரை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக கூறுகிறார் குமாரி. “பெற்றோர் எங்களிடம், ‘எங்களுக்கு வருமானம் குறைந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் என தெரியவில்லை. பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் ஒரு பொறுப்பு எங்களுக்கு முடிந்துவிடும்’ என சொல்கின்றனர்.” பெண் குழந்தைகள் சுமையல்ல என்றும் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் என்றும் பேசி அவர்களுக்கு புரிய வைக்க முயலுகிறோம்.

உதாரணமாக, 16 வயது கவுரி அவகாசம் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தார். 9லிருந்து 24 வயது வரை இருக்கும் ஏழு குழந்தைகளில் மூத்தவர் கவுரி. அவர்களும் புயா சாதியை சேர்ந்தவர்கள்தான். பல முறை கவுரியை திருமணம் செய்து கொடுக்க முயன்றார்கள். அவர்களை காத்திருக்கச் சொல்வதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறார் கவுரி. ஆனால் மே 2020ல் அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

மகுலி தாமோதர் கிராமத்துக்கு வெளியே இருக்கும் பேருந்து நிறுத்தமருகே உள்ள சந்தடி மிகுந்த சந்தையில் நின்றபடி, திருமணத்துக்கு முன் நடந்த சம்பவங்களை விவரித்தார் கவுரி. “முதலில் பெகுசராயில் உள்ள ஒரு படிப்பறிவு இல்லாதவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்க என் தாய் விரும்பினார். ஆனால் என்னை போல் படித்தவரைதான் திருமணம் செய்ய நான் விரும்பினேன்,” என்கிறார் அவர். “அதற்கு பிறகு, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி, ஜவஹர் ஜோதியில் இருப்பவர்களை அழைத்த பிறகுதான் என் தாய் அம்முயற்சியை கைவிட்டார்.”

ஆனால் கவுரியின் மறுப்பும் காவலர்களை அழைப்பதாக கொடுத்த மிரட்டல்களும் அதிக நாட்களுக்கு செல்லுபடி ஆகவில்லை. கடந்த வருடத்தின் மே மாதத்தில், அவரின் குடும்பம் கல்லூரி படிக்கும் ஒருவனை தேடிப் பிடித்தது. சிலரை மட்டும் கூப்பிட்டு கவுரி திருமணத்தை நடத்தியும் முடித்தது. மும்பையில் அன்றாடக் கூலியாக வேலை பார்க்கும் அவரின் தந்தை கூட பொதுமுடக்கத்தால் திருமணத்துக்கு வர முடியவில்லை.

“இந்த நிலையிலிருப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். படித்து நல்ல நிலைக்கு வருவேனென நான் நினைத்தேன். இப்போதும் கூட நான் தளர்ந்துவிட வில்லை. ஆசிரியையாக ஒருநாள் நான் ஆவேன்,” என்னும் அவர், “ஆசிரியையாகி பெண் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் இருக்கின்றன என பயிற்றுவிப்பேன்,” என்கிறார்.

PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவின் பதின்வயது மற்றும் இளம்பெண்களை பற்றிய தேசிய அளவிலான செய்தியளிக்கும் திட்டம், முக்கியமான விளிம்புவாழ் குழுக்களின் இத்தகைய சூழல்களை அவர்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு ஆராய முனையும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய விரும்பினால் [email protected] மற்றும் [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு எழுதுங்கள்.

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Amruta Byatnal

Amruta Byatnal is an independent journalist based in New Delhi. Her work focuses on health, gender and citizenship.

Other stories by Amruta Byatnal
Illustration : Antara Raman

Antara Raman is an illustrator and website designer with an interest in social processes and mythological imagery. A graduate of the Srishti Institute of Art, Design and Technology, Bengaluru, she believes that the world of storytelling and illustration are symbiotic.

Other stories by Antara Raman