தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள கொரோனா மலர்கள்

2021-05-11@ 14:31:31

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை காலமான மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். பல வகையான மற்றும் பல வடிவங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.  இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், இம்முறையும் மலர் கண்காட்சிக்காக பல்வேறு பலர் செடிகள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மலர் கண்காட்சி நடத்த வாய்ப்பில்லை. எனினும், பூங்கா முழுவதிலும் பல வகையான மலர் செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

இதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூத்துள்ளன. இதில், 500 தொட்டிகளில் கிரவுன் ைடசி என்ற வகையை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், பல வண்ண மலர்கள் பூத்துள்ளது. இந்த மலர்களின் நடுவே கொரோனா வடிவத்தை போன்று, அதாவது கொரோனா கிரீடம் போல் காட்சியளிக்கிறது. இதனால், இதனை பலரும் கொரோனா மலர்கள் என்று அழைக்கின்றனர். கொரோனா நோய் தொற்று பரவி உலகை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பூவா? என்று ஆச்சர்யத்துடன் சிலர் கேட்டனர்.

இந்த மலர்கள் தற்போது பூங்காவில் உள்ள தொட்டிகளில் பூத்துள்ளன. இதனை கண்டு பலரும் வியப்படைகின்றனர். ஆனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் இந்த மலர்களை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.