கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூச்செடிகள் பராமரிப்பு பணி தீவிரம்: ரசிக்கத்தான் ஆளில்லை

2021-05-11@ 14:32:43

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பிரையண்ட் பூங்காவில் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்கும். கோடை விழா, மலர் கண்காட்சியும் இந்த சீசனில்தான் நடத்தப்படும். இதனை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்து செல்வர். ஆனால் தற்போது கொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை உள்ளது. இதனால் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசிக்க ஆளின்றி பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. எனினும் பூங்காக்களில் உள்ள மலர் செடிகளை தோட்டக்கலைத்துறையினர் பணியாளர்களை கொண்டு பராமரித்து வருகின்றனர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் வர தடையால் பூங்காக்களில் பூத்துள்ள பூக்களை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த காலத்தில் பூச்செடிகளை பராமரிப்பது அவசியமான ஒன்றாகும். அதனால்தான் பூக்களை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். மேலும் இதன்மூலம் பணியாளர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கிறது’ என்றனர்.