மைதானத்தை பார்க்கையில் கைலாஷ் கந்தகாலேயின் கண்கள் விரிந்தன. “நிறைய விவசாயிகள் இங்கே இருக்கிறார்கள்,” என்றார் நிலமற்ற 38 வயது தொழிலாளர்.

தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரோடு ஜனவரி 24ம் தேதி கைலாஷ்ஷும் சேர்ந்து கொண்டார். “மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க இங்கு வந்துள்ளேன். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் என் குடும்பத்துக்கு கிடைக்கும் உணவை அவை பாதிக்குமென தெரிந்து கொண்டேன்,” என்கிறார் கைலாஷ். அவரின் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தக்காளி, வெங்காயம், நெல் முதலியவற்றை விளைவிப்பவர்கள்.

ஜனவரி 25லிருந்து 26ம் தேதி வரை சம்யுக்தா ஷேத்கரி கம்கர் மோர்ச்சா ஒருங்கிணைத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அகமத்நகர் மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் 500 கோலி மகாதேவ் ஆதிவாசிகளில் அவரும் ஒருவர். அகோலா, பார்னெர் மற்றும் சங்கம்னெர் தாலுகாக்களை சேர்ந்த ஆதிவாசி விவசாயிகள் தலா 200 ரூபாய் செலுத்தி மும்பை வரையிலுமான 300 கிலோமிட்டர் தூரத்தை கடக்க 35 வேன்களை அமர்த்தினர்.

காம்பே கிராமத்தை சேர்ந்த கைலாஷ்தான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். மனைவி பாவனா, முதிய பெற்றோர் மற்றும் மூன்று குழந்தைகள் குடும்பத்தில் இருக்கின்றனர். “நான் பிறருடைய நிலத்தில் வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் வருடத்தில் 200 நாட்களுக்கு மேல் வேலை செய்ய என் கால் ஒத்துழைப்பதில்லை,” என்கிறார் அவர். 13 வயதில் அவருடைய கால் உடைந்து போனது. போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாததால், முடமாகிவிட்டது.  பாவ்னாவாலும் கடின வேலைகள் செய்ய முடியாது. அவரின் வலது கையில் குறைபாடு கொண்டது.

குறைவான நிலையற்ற வருமானம் கொண்ட கந்தாகலே குடும்பத்துக்கு பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் மிகவும் முக்கியம். 2013ன் உணவு பாதுகாப்பு சட்டப்படி 80 கோடி பேருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து கிலோ தானியங்களை மாதந்தோறும் மானிய விலையில் கிடைக்க வழி செய்கிறது இச்சட்டம். அரிசி ஒரு கிலோ 3 ரூபாய். கோதுமை ஒரு கிலோ 2 ரூபாய். பருப்பு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்.

ஆனால் கைலாஷ்ஷின் 7 பேர் குடும்பத்துக்கு 15 கிலோ கோதுமையும் 10 கிலோ அரிசியும் மட்டும்தான் கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை விட 10 கிலோ குறைவு. காரணம், இரு குழந்தைகளின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இல்லாமல் போனதுதான்.

“இந்த 25 கிலோவும் 15 நாட்களில் தீர்ந்துவிடும். பிறகு எங்களுடைய பசியை நாங்கள் அடக்க வேண்டும்,” என்கிறார் கைலாஷ். ஒவ்வொரு மாதமும் பொது விநியோக உணவுப் பொருட்களை வாங்க அவர் நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று வருகிறார். “எண்ணெய், உப்பு மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டும். விலையுயர்ந்த அரிசியை சந்தைக் கடையிலிருந்து வாங்க யாரிடம் பணம் இருக்கிறது?”

PHOTO • Jyoti Shinoli
PHOTO • Jyoti Shinoli

கைலாஷ் கந்தாகலே (இடது) மற்றும் நம்தேவ் பங்க்ரே ஆகியோரும் மும்பை வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட கோலி மகாதேவ் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்

இவற்றை போன்ற சாத்தியங்கள் கொண்டிருக்கும் வேளாண் சட்டங்கள் கைலாஷ் கந்தாகலேவை கவலைப்பட வைத்திருக்கின்றன. “இச்சட்டங்கள் பெரியளவு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல. இப்போராட்டம் நம் அனைவருக்குமானது,” என்கிறார் அவர்.

“எங்களுக்கு நிலையான வேலை இல்லை. உணவுப் பொருட்களையும் நிறுத்திவிட்டால் நாங்கள் எதை சாப்பிட வேண்டுமென அரசை கேட்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர் கோபத்துடன். கைலாஷ்ஷின் அச்சத்துக்கு அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 2020 ஆகும். பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் விதைகள் முதலிய உணவுப் பொருட்களுக்கான சேமிப்பு வரையறையை அச்சட்டம் நீக்குகிறது. அசாதாரண நிலைகளில் மட்டும்தான் வரையறை விதிக்கப்படும்.

“ஒரு நிறுவனம் எவ்வளவு உணவுப் பொருட்களையும் அதன் குடோன்களில் சேமித்து வைக்கும் வாய்ப்பை இத்திருத்தம் கொடுப்பது தெளிவாக தெரிகிறது. விளைவாக பதுக்கல் அதிகரிக்கும். நாட்டின் லட்சக்கணக்கான ஏழை மக்களின் அன்றாட உணவாக இருக்கும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றுக்கான கள்ளச்சந்தை அதிகரிக்கும்.,” என்கிறார் காத்கி புத்ருக் கிராமத்தை சேர்ந்த நம்தேவ் பங்க்ரே. அவரும் கோலி மகாதேவ் சமூகத்தை சேர்ந்தவர்தான். அவரும் அவர் மனைவியும் இரண்டு ஏக்கர் குடும்ப நிலத்தில் கம்பு விளைவிக்கின்றனர்.

“ஊரடங்கின்போது தேவை இருந்தோருக்கும் வேலையில்லாமல் இருந்தோருக்கும் அரசால் இலவச உணவு தானியம் கொடுக்க முடிந்ததற்கு காரணம் சேமிப்பில் தானியங்கள் இருந்ததுதான். இத்தகைய உணவு பாதுகாப்பு நெருக்கடி காலத்தில் பதுக்கலால் பாதிப்படையும்,” என்கிறார் 35 வயது நம்தேவ். அத்தகைய சூழலில் சந்தையிலிருந்து உணவு தானியம் வாங்கவே அரசு சிரமப்படும் என ஊகிக்கிறார் அவர்.

விவசாயிகள் இந்தியா முழுவதும் எதிர்க்கும் புதிய சட்டங்களை பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் நம்தேவ். வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் 2020 கட்டற்ற சந்தை வணிகத்தை விவசாயத்தில் ஊக்கப்படுத்தும் என்னும் அவர் விளைவிப்பவருக்கான அதாரமாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் பொருள் விற்பனை கமிட்டி, மாநில கொள்முதல் போன்றவற்றை அச்சட்டம் நீர்த்துப் போக வைக்கும் என்கிறார்.

“இந்திய உணவு நிறுவனத்துக்கு பதிலாக சந்தையில் உயர்ந்த விலைகளுக்கு விவசாயிகள் தங்களின் தானியங்களை விற்றால் ஏழை விவசாயி, தொழிலாளர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றார் எங்கு சென்று தானியங்களை வாங்குவார்கள்?” என கேட்கிறார் நம்தேவ். (இந்திய உணவு நிறுவனம்தான் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் அமைப்பு.) “கார்ப்பரேட்காரர்கள் அவர்களுக்கு இலவசமான உணவளிப்பார்களா?”

PHOTO • Jyoti Shinoli

பகுபாய் மெங்கல், லகு உகாதே, ஏக்னாத் பெங்கல் மற்றும் நம்தேவ் பங்க்ரே (இடதிலிருந்து வலது) ஆகியோர் இச்சட்டங்கள் குடும்பங்களின் உணவை பாதிக்கும் என நம்புகின்றனர்

திகாம்பர் கிராமத்தை சேர்ந்த பகுபாய் மெங்கலை பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதார விலைதான் முக்கியமான உடனடி பிரச்சினையாக இருக்கிறது. தேசிய விவசாயிகள் வாரியத்தால் (சுவாமிநாதன் கமிஷன்) பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைதான் நாட்டின் எண்ணற்ற விவசாயிகளின் முக்கியமாக கோரிக்கையாக இருக்கிறது. “தக்காளியோ வெங்காயமோ நாங்கள் மண்டிகளுக்காக அறுவடை செய்வோம். 25 கிலோ தக்காளிக்கு வணிகர் வெறும் 60 ரூபாய்தான் கொடுப்பார்,” என்கிறார் 67 வயது பகுபாய். குறைந்தபட்சம் 500 ரூபாய் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. “போக்குவரத்துக்கான செலவை கழித்தால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை.”

பகுபாய் தக்காளியையும் கம்பையும் நெல்லையும் நான்கு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார். “அது ஒரு காட்டு நிலம். ஆனால் நீண்ட காலமாக அதில் விவசாயம் பார்க்கிறோம்,” என்கிறார் அவர். “அரசு எங்களுக்கான நிலவுரிமையை கூட தரவில்லை. இந்த நிலையில் இப்படி விவசாயத்துக்கு எதிரான சட்டங்களையும் கொண்டு வருவதா - ஏன்?” என்கிறார் கோபத்துடன் பகுபாய்.

அகமத்நகர் விவசாயிகள், விவசாயத் தொழில்களும் ஒப்பந்த விவசாய முறையும் கொண்டு வரக் கூடிய ஆபத்துகளை தெரிந்திருக்கிறார்கள். குறிப்பாக விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம் 2020 அமல்படுத்தப்பட்டால் சிக்கல் ஏற்படும் என அஞ்சுகின்றனர்.இச்சட்டங்கள் பெருநிறுவனங்களுக்கான வாய்ப்பை அதிகரித்து விவசாயிகள் மீதான அதிகாரத்தை அவர்களிடம் கொடுக்கும் என்பதை தில்லியில் போராடும் விவசாயிகளை போலவே மகாராஷ்ட்ரா விவசாயிகளும் புரிந்திருக்கின்றனர்.

ஏக்நாத் பெங்கலுக்கு இத்தகைய விவசாயமுறைகளுடன் சம்பந்தமில்லையெனினும் அவர் வசித்த தாலுகாவிலும் பக்கத்து பகுதிகளிலும் பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறார். “கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே கிராமங்களுக்குள் நுழைந்துவிட்டன. அதிக விலையை சொல்லி விவசாயிகளை ஈர்த்துவிட்டு, கடைசி நேரத்தில் தரத்தை சொல்லி விளைபொருளை நிராகரித்து விடுகின்றனர்.”

சம்ஷெர்பூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது விவசாயி கம்பு மற்றும் நெல் ஆகிய பயிர்களை ஐந்து ஏக்கர் காட்டு நிலத்தில் சம்பா பருவத்தில் விளைவிக்கிறார். நவம்பரிலிருந்து மே மாதம் வரை பிற நிலங்களில் வேலை பார்க்கிறார். “ஊரடங்கு காலத்தில் ஒரு நிறுவனம் விதைகளையும் பூச்செடிகளையும் எங்களின் கிராமத்தில் விநியோகித்தது. பெரிய நிலங்களில் நடச் சொன்னார்கள். விளைச்சல் வந்ததும் நிறுவனம் அவற்றை எடுக்க முடியாதென நிராகரித்துவிட்டனர். விவசாயிகள் விளைச்சலை குப்பைக்கு தூக்கியெறிய வேண்டியிருந்தது.

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Jyoti Shinoli is a senior reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti Shinoli