ஒத்துழைப்பது அவசியம்

2021-05-10@ 00:33:40

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் அதிதீவிரம் அடைந்து வருகிறது. மே 2வது வாரத்தில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு மாநிலமும் கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, உ.பி., கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி தொற்று மேலும் பரவாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதை தடுக்கும் வகையில் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிக்கொள்ள வசதியாக காலை 6 மணி முதல் 12 மணி வரை  கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை விரைந்து வாங்கி கொண்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும். கூடியமட்டும் வாகனங்களை எடுத்து செல்வதை தவிர்த்து நடந்தே செல்வது நல்லது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இறப்பு, திருமண சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் இயங்காது. ஆட்டோ, கால்டாக்ஸி, வாடகை வாகனங்களும் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் கொரோனா தொற்றின் அச்சம் உணர்ந்து மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். காவல்துறைக்கும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இரண்டு வார ஊரடங்கால் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து இம்முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மக்கள் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுப்புடன் நடந்து கொண்டால் 2 வாரங்களுக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்க வேண்டிய அவசியமிருக்காது என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளது. எனவே, கொரோனாவை நமது மாநிலத்தில் இருந்து முற்றிலும் விரட்டியடிக்க அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது. வீட்டை விட்டு அநாவசியமாக வாகனங்களை எடுத்துக்கொண்டு சாலைகளில் சுற்றிரித்திரிய கூடாது என்று இளைஞர்களுக்கு பெற்றோர்களே அறிவுறுத்த வேண்டும். கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வை இளம்பெண்கள், முதியவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை எடுத்து கூற வேண்டும். முககவசம் தான் முதல் பாதுகாப்பு என்பதை புரிந்துகொண்டால் தொற்றையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும்.

Tags:

தலையங்கம் thalaiyangam