புதிய கட்டுப்பாடுகள் அமல் 2,200 கடைகளுக்கு 12 மணிக்கே பூட்டு-பால், மருந்தகங்களுக்கு மட்டும் அனுமதி

2021-05-07@ 14:09:11

நாகை : கட்டுப்பாடுகளுடன் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 2200 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், பேருந்துகளும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். பொது போக்குவரத்தில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி மற்றும் டீக்கடைகள் நேற்று மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட டீக்கடைகள் அடைக்கப்பட்டது. குறிப்பாக புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பப்ளிக் ஆபீஸ் ரோடு, கீழ்வேளூர், கீழையூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை அடைக்கப்பட்டது. டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடைகளுக்கு வந்து சென்றனர். அதேபோல் மாவட்டத்தில் காய்கறி கடைகள் 750 மூடப்பட்டது.

மருந்தகம், பால்விநியோகம் என அத்தியாவசிய தேவை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் நாகை நாகூர் சாலை, நீலா தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்களிலும் பயணிகள் குறைவாகவே பயணம் செய்தனர்.

மயிலாடுதுறை: தமிழக அரசு அறிவித்துள்ளபடி 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்படும் என்பதால் மயிலாடுதுறை கடைவீதியில் காலை முதல் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. 12மணிக்குமேல் அனைத்து கடைகளும் மூடவேண்டும் என்று நகராட்சி துறையினர் அறிவுறுத்தி சென்றனர். பகல் 12 மணிக்கு கடைகள் மூடப்பட்டது. அப்போது பேருந்துகளில் பயணிகள் கூட்டமாக நின்றுகொண்டே பயணம் செய்தனர். பின்னர் படிப்படியாக தொடர்ந்து 12 மணிக்கு மேல் அனைத்து  கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேதாரண்யம்: வேதாரண்யம் நகர் பகுதிகள் மற்றும் அயக்கரன்புலம் தாணிக்கோட்டகம் செம்போடை கரியாப்பட்டினம் தலைஞாயிறு உள்ளிட்ட 60 ஊராட்சிகளில் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் என சுமார் 500க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோ, வாடகை கார் ஓடவில்லை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டடு உள் ளனர். அனைத்து கடைகளும் அரசு உத்திரவுபடி 12 மணிக்கு அடைக்கப்பட்டு , போக்குவரத்து இல்லாததால் வேதாரண்யம் முக்கிய வீதிகலான வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.