கொரோனா பாதுகாப்பு விதிமீறி செயல்பட்ட 3 நிறுவனங்கள், 4 கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

2021-05-07@ 06:02:07

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிமீறி செயல்பட்ட 3 நிறுவனங்கள், 4 கடைகளுக்கு  அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கடை நடத்துபவர்களை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து கடைகளை மூடினர். ஒரு சில இடங்களில் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், பெருங்குடி மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி முருகேஷ் தலைமையில் மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் பெருங்குடி மண்டலம் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளிக்கரணை, தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் விதிமீறி செயல்பட்ட தனியார் கார் உதரிபாக விற்பனை மற்றும் பழுது நீக்கும் நிறுவனம் மற்றும் கொட்டிவாக்கம், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள  தனியார் கார் விற்பனை நிலையம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பொருளாதாரம் சீர்குலையாமல் இருக்கும் வகையிலும் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வீரியம், பரவல் தன்மையை மக்கள் உணர்ந்து, ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு பிறப்பித்த கால அவகாசத்திற்குள் கடைகள் திறக்கப்பட்டிருந்தால், பாரபட்சமின்றி, சீல் வைக்கப்படும். இந்த ஆய்வு தினசரி தொடரும்,’ என்றனர்.

* தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் குமார் (48) என்பவருக்கு சொந்தமான காயலான் கடை நேற்று விதிமீறி இயங்கி வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை மண்டல வரி மதிப்பீட்டாளர் கோபி, ரமேஷ் மற்றும் உரிமம் ஆய்வாளர் ஜோசப் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் நகைக்கடை இயங்கி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரி வசூலிப்பவர் சுந்தரமூர்த்தி மற்றும் உதவியாளர் சரத்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கடையை மூடும்படி அறிவுறுத்தினார். மேலும் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

* அமைந்தகரை பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் கொரோனா விதிமுறைகளை மீறி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 4 கடைகளில் வியாபாரம் நடைபெறுவதாக, அமைந்தகரை மண்டல வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்துறை அதிகாரி ஜோசப் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 4 கடைகள் விதிமீறி செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, 4 கடைகளூக்கு சீல் வைத்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும், இதேபோல் கொரோனா விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.