பழநியில் கடையை பூட்டி வியாபாரம்-போலீசார் எச்சரித்து அடைக்க வைத்தனர்

2021-05-07@ 14:26:03

பழநி :  பழநியில் கடையை பூட்டி வியாபாரம் செய்தவர்களை கண்டித்த போலீசார், தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் சீல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர் தமிழகத்தில் கொரோனா 2வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளொன்றிற்கு  22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி நேற்று முதல் 12 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்க வேண்டும். பேக்கரி, உணவகங்கள் போன்றவற்றில் பார்சல் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

 முதல் நாளான நேற்று பழநியில் பலரும் அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டிருந்தனர். துணிக்கடைகள், செல்போன் கடைகள், தையற்கடைகள் உள்ளிட்டவை கதவை பூட்டியபடி இயங்கின. இதுதொடர்பாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசாரும், தாசில்தார் வடிவேல் முருகன் தலைமையிலான வருவாய்த்துறையினரும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

ஏராளமான கடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடைக்காரர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சீல் வைப்பு போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து சென்றனர். பஸ் நிலையம், ரயில்வே பீடர் சாலை, புதுதாராபுரம் சாலை,  காந்தி மார்கெட் பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டன.

Tags:

பழநி கடை வியாபாரம்