அனுமதியின்றி செயல்பட்ட மாட்டு சந்தைக்கு சீல்

2021-05-07@ 14:04:56

ஈரோடு : ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட மாட்டு சந்தைக்கு சீல் வைத்த மாநகராட்சி நிர்வாகம், போலீசிலும் புகார் செய்துள்ளது.
ஈரோடு  மாநகரில் கொரோனா பரவலை தடுக்க விதமாக சந்தை நடத்த முன்அனுமதி பெற வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்திருந்தது.  ஆனால் எவ்வித அனுமதியும் இல்லாமல் நேற்று காலை கருங்கல்பாளையம் மாட்டு  சந்தை நடந்தது. இது குறித்த தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன்  மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அனுமதி பெறாமல்  சந்தை நடத்தியதோடு மட்டுமல்லாது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும்  பின்பற்றப்படவில்லை. இதையடுத்து சந்தையில் இருந்த மாடுகளை உடனடியாக  அப்புறப்படுத்த உத்தரவிட்ட ஆணையாளர் இளங்கோவன் சந்தைக்கு சீல் வைத்ததோடு  அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சந்தை உரிமையாளர் மீது  கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சந்தைக்கு மாடுகளை ஏற்றி  வந்த 100க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:

மாட்டு சந்தை சீல் ஈரோடு