செயல் விளக்கத்திற்காக தெளித்த மருந்தால் பருத்தி சாகுபடி பாதிப்பு-வேளாண் அதிகாரிகள் ஆய்வு

2021-05-07@ 14:12:02

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே செயல் விளக்கத்திற்காக வாங்கிச் சென்ற பூச்சி மருந்தை தெளித்ததால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஒரு விவசாயி வயலில் பருத்தி பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தனியார் சார்பில் செயல் விளக்கத்திற்காக வாங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்தை பருத்தி பயிரில் தெளித்தார். அதைத் தொடர்ந்து பருத்தி பயிர் வளர்ச்சி குன்றி கருக தொடங்கியது.

இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த விவசாயி வேளாண் அலுவலகத்தில் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவினர் வடரங்கம் கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டுள்ள பருத்தி பயிரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அங்குள்ள விவசாயிகளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கூறுகையில், பருத்தி பயிரில் தேவையில்லாமல் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க வேண்டாம். இயற்கை பூச்சி மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி அலுவலகத்தை நாடி தெரிந்து கொள்ளலாம் என்றார். வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.