மாநகர செய்தி துளிகள்...

2021-05-06@ 07:27:16

டெக்ஸ்டைல்ஸ் ஊழியருக்கு கத்திகுத்து: ராமநாதபுரத்தை சேர்ந்த பாண்டித்துரை(23), பள்ளிக்கரணையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடன் பரமசிவம் என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். பாண்டித்துரை, நிறுவனத்தின் மேற்பார்வையாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்,  ஆத்திரமடைந்த பரமசிவம் நேற்று முன்தினம் பாண்டிதுரையிடம்  வாக்குவாதத்தில் ‌ஈடுபட்டு கத்தியை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த பாண்டிதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.
போக்சோவில் ரயில்வே ஊழியர் கைது: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயபால்(60).  ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது 12 வயது மகளுக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் ஜெயபாலை போக்சோவில் கைது செய்தனர்.

செல்போன் பறித்த 2 பேர் கைது: ஐசிஎப் கான்ஸ்டபிள் சாலையை சேர்ந்த அருள் நேற்று முன்தினம் நடந்து சென்றபோது பைக்கில் வந்து செல்போன் பறித்து சென்ற ஓட்டேரி முகமது ரபி(19), புளியந்தோப்பு விஜய்(19) ஆகியோரை ஐசிஎப் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது: புத்தாகரத்தை சேர்ந்த சுந்தர்(26) மற்றும் அரவிந்த் ஆகியோர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு போலீசார்  நேற்று முன்தினம் கைது செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுவிற்ற இருவர் கைது: புளியந்தோப்பு ஜே.ஜே.நகர் 7வது தெருவில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற நீலாவதி(37), ஜீவா ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

வாலிபர் மீது வெந்நீர் ஊற்றியவர் கைது: நேபாளத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(36). நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் குடிநீர் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கொல்கத்தாவை சேர்ந்தவர் ஹர்ஷத்(23). அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை செய்கிறார். இந்த கடையில் இருந்து, வெளியேறும் கழிவுநீர், குடிநீர் கம்பெனி அருகே தேங்கியது. இது தொடர்பாக, லட்சுமணன், ஹர்ஷத்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹர்ஷத், வெந்நீரை லட்சுமணன் மீது ஊற்றினார். சக ஊழியர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் நொளம்பூர் போலீசார் ஹர்ஷத்தை கைது செய்தனர்.

வாலிபர் தற்கொலை: மீஞ்சூர் அடுத்த காட்டூர் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(29). தனியார் நிறுவனத்தில் கார்பென்டர். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெண் பார்த்து வந்தனர். ஆனால் எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் பாலாஜி, கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் பொன்னேரியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்துக்கு பாலாஜி சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலை அங்குள்ள ஆரணி ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது காணாமல் போன பாலாஜி என தெரியவந்தது.