டிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்

2021-05-06@ 03:32:58

சென்னை : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தள்ளாத வயதிலும், தளராத போராளியாக வலம் வந்த, டிராபிக் ராமசாமி என்று, பொதுமக்களால் விரும்பி அழைக்கப்பட்ட ராமசாமி, இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். தம்முடைய எளிய வாழ்க்கைச் சூழலிலும், அதிகார வர்க்கத்தோடும், அரசு அதிகாரிகளோடும் துணிந்து போராடினார். சென்னை வாழ் நடுத்தர மக்கள், ஏழை எளியவர்கள், குறிப்பாக நடைபாதைகளில் வாழக்கூடியவர்கள் சந்திக்கின்ற இன்னல்களுக்கு அணை போடுவதாக, அவருடைய பணிகள் அமைந்தன. தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்குப் புரிய வைத்து விட்டுச் சென்று இருக்கின்ற, அந்த மாமனிதரின் மறைவுக்கு, மதிமுக சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): சமூக ஆர்வலரும், சிறந்த போராளியும் ஆன டிராபிக் ராமசாமி வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடியவர். அவரை இழந்து வாடும் அவரது உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் பொது மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி):  டிராபிக் ராமசாமி மறைவால் ‘நியாயம்’ கேட்கும் ஒரு குரல் அடங்கிப்போனது.  டிடிவி தினரகன் (அமமுக ): சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த டிராபிக் ராமசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காந்தி உதவியாளர் மரணத்துக்கு இரங்கல்
மகாத்மா காந்தியடிகளிடம் 5 ஆண்டுகள் தனிச்  செயலாளராக பணியாற்றிய கல்யாணம் தனது (99). வயது  மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். காந்திய கொள்கைகளை பின்பற்றி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.