அமராவதி அணை நீர்மட்டம் குறைகிறது

2021-05-06@ 13:52:39

உடுமலை: அமராவதி அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் சிற்றாறு, தேனாறு, பாம்பாறு, கூட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு தண்ணீர் வரும்.

கடந்த ஆண்டு ஜூலையில் பெய்த தென்மேற்கு பருவமழையால் அணை இருமுறை நிரம்பி, உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அடுத்து டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் மீண்டும் அணை நிரம்பி, 3-வது முறையாக உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அப்போது, அணையின் நீர்மட்டம் உச்சபட்ச அளவாக 89.90 அடிக்கு இருந்தது. இந்நிலையில், பருவம் தவறிய மழை காரணமாக இந்த ஆண்டு ஜனவரியிலும் நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பிப்ரவரி மற்றும் மார்ச் 10ம் தேதி வரை 100வது நாளாக அணை நீர்மட்டம் 88 அடியாக இருந்தது.

தற்போது கோடை வெயில் காரணமாகவும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று நீர்மட்டம் 69.75 அடியாக இருந்தது. அணைக்கு 15 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 15 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. எனவே, அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, இந்த கோடையில் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தட்டுப்பாடு இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:

அமராவதி அணை