விதிமீறி கட்டிய சுற்றுச் சுவர் கனமழைக்கு இடிந்து விழுந்தது

2021-05-05@ 12:26:53

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு கட்டடக் காடுகளாக மாறி வருகிறது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த வசதி படைத்தவர்கள் குறிப்பிட்ட அனுமதியைப் பெற்று விதிமீறி மூன்று அல்லது நான்கு அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் அடுத்த வண்டிச்சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட டிரமுளா பகுதியில் ஏராளமான வெளிமாநிலங்களை சேர்ந்த வசதி படைத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் 50க்கும் மேற்பட்ட பங்களாக்கள் கட்டியுள்ளனர். இந்த பகுதியில் அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விதி மீறி பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பெள்ளட்டி மட்டம் கிராமத்தின் சுடுகாடு பகுதிக்கு செல்ல தார் சாலை அமைத்துள்ளனர். ஆனால் அந்த சாலையை பங்களாக்களுக்கு செல்லவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் அங்கு விதி மீறி கட்டப்பட்டு வந்த சுற்றுச் சுவர் நேற்று முன்தின்ம இரவில் பெய்த மழையில் இடிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இது குறித்து அங்குள்ள தொழில் அதிபர்கள் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம்  சாலையில் கொட்டியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அங்கு ஜேசிபி கொண்டு பணியாற்ற உத்தரவிட்டார். உடனடியாக சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் கொட்டியுள்ள மண் அகற்றப்பட்டது. அதே நேரத்தில் அங்கு இரண்டு மின் கம்பங்கள் விழுந்ததால் அவற்றையும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்தனர்.

Tags:

கனமழை