திருச்சி: அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது. கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர லேசான அறிகுறி உள்ளவர்களை பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீதம் படுக்கை வசதி ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கொரோனா பரவல் நாளுக்குநாள் தீவிரமாகி வருவதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வார்டுகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தும் முகாம்கள், மருத்துவமனைகளுக்கு தேவையான 200க்கும் மேற்பட்ட மெத்தைகள் (பெட்) சென்னையிலிருந்து நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டு, மாவட்ட குறைதீர் கூட்ட அரங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.