திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் அமைச்சர்கள் யார் என்பது மாநில கமிட்டி கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என முதல்வர் பினராய் விஜயன் கூறினார். கேரள சட்டபேரவை தேர்தலில் இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வருகிறது. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில கமிட்டி கூட்டத்தை எங்கு நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாநில கமிட்டி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. மாநில கமிட்டி கூட்டத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின்னர் இடதுமுன்னணி கட்சிகளின் கூட்டம் நடக்கும். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான அமைச்சர்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கும், பெண்களுக்கும் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை. கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சைலஜா, ராமகிருஷ்ணன், ஜலீல், மொய்தீன், எம்.எம்.மணி, கடகம்பள்ளி சுரேந்திரன், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஜலீல், தனது உறவினருக்கு அரசு பணி வழங்கியதாக கூறப்பட்ட புகார் காரணமாக ராஜினாமா செய்தார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது.
நேமம் தொகுதியில் பாஜவை தோற்கடித்த சிவன்குட்டிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது. இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் திருவனந்தபுரம் கழக்கூட்டம் தொகுதியில் வெற்றிபெற்ற கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. இதுதவிர சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினரான கோவிந்தன், முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன், பாலகோபால், ராஜீவ், ராஜேஷ், சித்தரஞ்சன், சஜி செரியான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், முதல்வர் மற்றும் அமைச்சர்களாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என இதுவரை தீர்மானிக்கப்பட வில்லை. கட்சியின் மாநில கமிட்டி கூட்டத்தில் தான் தீர்மானிக்கப்படும் என கூறினார்.
புதிய அரசு மே 18ல் பதவியேற்பு?
வரும் 17ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தையும், மறுநாள் இடது முன்னணி கூட்டத்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில் புதிய அமைச்சர்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இதனால் 18ம் தேதி மாலையோ அல்லது அதற்கு மறுநாளோ புதிய அரசு பதவி ஏற்கும் என கருதப்படுகிறது.