அதிராம்பட்டினம் பகுதியில் அதிகாலை மழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: பாதியில் கரை திரும்பினர்

2021-05-05@ 12:29:18

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் கடற் பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் கட்டு மரங்கள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடை காலம் தற்போது நடைமுறையில் இருந்து வருவதையொட்டி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டு படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீனவர்கள் வழக்கம் போல அந்தந்த துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது திடீரென கடல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து வேறு வழியின்றி மீனவர்கள் மீன்பிடிக்காமலேயே பாதியில் கரை திரும்பினர். இதனால் நேற்று உள்ளூர் மார்க்கெட்டுக்கு வரும் மீன் வரத்து குறைந்து மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.