சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாவட்டத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், மேல் சிகிச்சை எனக்கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இப்படி திடீரென வருபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. இதனால் நோயாளிகள் ஆம்புன்சிலேயே ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சேலம் மாநகர பகுதியை சேர்ந்த 30வயது இளம்பெண், மாவட்ட பகுதியை சேர்ந்த 45வயதுக்குட்பட்ட 2ஆண்கள் என்று மொத்தம் 3பேரை, ஆக்சிஜன் ெபாருத்திய நிலையில் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக படுக்கைகள் ஒதுக்க வசதியில்லாததால் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிப்பு முற்றிய நிலையில் இருந்த 3பேரும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் நேர்ந்த இந்த அவலம் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் முருகேசன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கடைசி கட்டத்தில் அனுப்பி வருகின்றனர். ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு கைமீறி செல்கிறது என்றார்.