சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்த வக்கீல் பாலாஜிராம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5% மக்களுக்கே இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.