தமிழகத்தில் 5 டிகிரி வரை வெயில் எகிறும் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

2021-05-04@ 00:46:11

சென்னை: கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 1 கிமீ உயரத்தில் நிலவும் வளி மண்டலமேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை நேற்று பெய்தது. இருப்பினும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், இன்று முதல் 7ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்றும் நாளையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கடலோர மாவட்டங்களில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உணரப்படும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.