ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்!: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பேர் பலி..!!
2021-05-04@ 10:49:36
பெங்களூரு: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகர் தொழில்நுட்பத்தில் தேசிய தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். பெங்களூரு நகர் எலகங்கா என்ற பகுதியில் உள்ளது அர்கா தனியார் மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் நேற்று காலை வரை 45 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை முதல் தங்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இன்று காலையில் 14 சிலிண்டர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். அரசிடம் தாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தங்களுக்கு செவி சாய்க்கவில்லை.
ஆதலால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரில் நேற்று அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.