தகாத உறவு!: திருமங்கலத்தில் காதலியை கொன்று புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை..!!
2021-05-04@ 17:08:45
மதுரை: திருமங்கலத்தில் தகாத உறவில் காதலியை கொன்று புதைத்துவிட்டு வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகம் நகரில் மனைவியை பிரிந்து 10 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன். இதேபோன்று பசும்பொன் தெருவில் கணவரை பிரிந்து வசித்தவர் யோகா ஆசிரியை சித்ரா தேவி. மகளை யோகா வகுப்புக்கு அழைத்து சென்று வந்ததில் சித்ரா தேவியுடன் ஹரிகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் சித்ரா தேவியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சித்ரா தேவியை காணவில்லை என்று கடந்த 5ம் தேதி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரில் சித்ராதேவிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஹரிகிருஷ்ணனே சித்ராதேவியை கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள் அளித்த புகாரை அளித்து ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹரிகிருஷ்ணன் கைப்பட எழுதிய 10 பக்க கடிதமும் கிடைத்துள்ளது. அதில் சித்ராதேவியை கொலை செய்துவிட்டு கழிவறையில் புதைத்து வைத்திருப்பதாக ஹரிகிருஷ்ணன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று மாலை புதைக்கப்பட்ட சித்ராதேவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.