மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பாக ஹவாலா பணம் தருவதாக கூறி பேப்பர் கட்டில் பணத்தை வைத்து மறைத்து ரூ.40 லட்சம் மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி கஞ்சிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி (65). அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இதுதவிர வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் வேலையும் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு குழித்துறை பெரியவிளையை சேர்ந்த மணிகண்டன் (43), சிதறால் வெள்ளாங்கோட்டை ேசர்ந்த ஜாண் (38) ஆகியோர் வந்து ஜெபமணியை சந்தித்துள்ளனர்.
அப்போது எங்களுக்கு ஹவாலா பணம் மாற்றும் கும்பலை தெரியும். அவர்களிடம் கணக்கில் காட்டாத ஏராளமான பணம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு இரு மடங்காக அவர்கள் பணம் தருவார்கள். எனவே நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கூறி இருக்கும் பணத்தை கொண்டுவந்தால், அவர்களிடம் கொடுத்து இருமடங்காக பணம் பெற்று தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய ஜெபமணி தனது நண்பர்கள் சிலரிடம் கூறி பணம் தயார் செய்துள்ளார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஜெபமணி ரூ.2 லட்சம், அவரது நண்பர் ராஜன் ரூ.9 லட்சம், அனிஷ் ரூ.7 லட்சம் என்று பணம் கொடுத்து உள்ளனர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் ஹவாலா பணம் வாங்கி வருவதாக கூறி சென்று இருக்கின்றனர். அப்போது அவர்களுடன் இருந்த முருகன் போலீஸ் வருகிறது. உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார். இதனால் அவர்கள் அனைவரும் அங்கும் இங்குமாக ஓடி தப்பினர். பணத்தை கொடுத்த 3 பேரும் இதை யாரிடமும் கூறாமல் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஒரு வாரத்துக்கு பிறகு ஜாண் மீண்டும் ஜெபமணியை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அன்று போலீஸ் வந்துவிட்டதால் எல்லா பணமும் போய்விட்டது. இனிமேல் அதுபோல் நடக்காமல் பார்த்துகொள்ளலாம். இப்போது ரூ.40 லட்சம் ரெடி பண்ணுங்க ரூ.1 கோடி பணம் தருகிறேன் என்று கூறினார்.
இதற்கு ஒப்புகொண்ட ஜெபமணி நிலத்தை விற்று பணம் ரெடி செய்கிறேன் என்று கூறினார். அதன்படி நேற்று போனில் தொடர்பு கொண்டு பணம் தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து மாலை 5 மணிக்கு மார்த்தாண்டத்தில் உள்ள தம்புரான் குளத்தின் அருகில் பணத்துடன் நிற்பதாகவும், உங்கள் பணத்தை கொடுத்துவிட்டு ரூ.1 கோடியை பெற்றுகொள்ளலாம் என்றும் ஜாண் கூறினார். அவர் கூறியபடி ஜெபமணி, ராஜன், அனிஷ் ஆகியோர் தம்புரான்குளத்திற்கு சென்றனர். அங்கு ஜாண், மணிகண்டன் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் ஒரு சாக்கு மூட்டையை காண்பித்தனர்.அதை ஜாண் திறந்து காண்பித்தபோது ரூ.500 நோட்டு கட்டுகள் இருந்தது.
ஆனால் அவர்களது செயல் ஏமாற்றுவதுபோல் இருந்ததால் ஜெபமணி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ராஜமணி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஜாண் (38), மணிகண்டன் (43) ஆகியோர் சிக்கி கொண்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையையையும் பறிமுதல் செய்தனர். அதை பிரித்து பார்த்தனர்.
அப்போது வெள்ளை தாளை ரூபாய் நோட்டுகள் போல் கட்டு கட்டாக வைத்து அதன்மேல் ரூ.500 ஒரிஜினல் நோட்டை வைத்து மறைத்து மோசடி செய்தது தெரியவந்தது. கிடுக்கிப்பிடி விசாரணையில் தப்பி ஓடியவர்கள் விஜி, ஷாஜி, முருகன், குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்த கும்பலுக்கு ஹவாலா கும்பல் அல்லது பெரிய கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா? இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி சென்று இருக்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.