4 இடங்களை தாண்டாத பாஜ 20 ஆண்டுக்கு பிறகு பேரவை செல்கிறது

2021-05-04@ 01:33:07

சென்னை: தமிழகத்தில் 1989ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் பாஜ முதல் முறையாக வெற்றி பெற்றது. அக்கட்சியின் வேட்பாளர் வேலாயுதம் எம்எல்ஏ ஆனார். அதன்பின்னர் 2001ம் ஆண்டு திமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்தது. அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்ததால், அக்கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது. இதனால் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் மயிலாப்பூரில் லட்சுமணன், காரைக்குடியில் எச்.ராஜா, மயிலாடுதுறையில் ஜெகவீரபாண்டியன், பத்மநாபபுரம் வேலாயுதம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன்பின்னர் தனியாகவும், கூட்டணியாகவும் பல தேர்தலில் பாஜ போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி 20 தொகுதியில் போட்டியிட்டது.
அதில், நெல்லையில் நைனார் நாகேந்திரன், நாகர்கோவிலில் காந்தி, மொடக்குறிச்சியில் சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜ உறுப்பினர்கள் 4 பேர் மீண்டும் சட்டப்பேரவைக்குள் செல்கின்றனர். அதேநேரத்தில் ஏற்கனவே 2001ல் பெற்ற வெற்றியை அவர்களால் தாண்ட முடியவில்லை.