சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயிடம் ஆசி பெற்றார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றனர். இன்னும் சில தினங்களில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா பரவலுக்கு இடையே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் திமுக ஆட்சியமைக்க தேவையான அளவை விட பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ய உள்ளனர். தேர்தல் வெற்றிச் சான்றிதழை வாங்கியவுடன் நள்ளிரவில் நேராக கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று அவரது நினைவிடத்தில் சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நேற்று காலையில் தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி வாங்குவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அவருடன் துர்கா ஸ்டாலினும் சென்றார். அவர்களை மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி வரவேற்றார்.
கோபாலபுரம் இல்லம் தான் மு.க.ஸ்டாலின் பிறந்து வளர்ந்த வீடு. திருமணம் முடிந்தும் சில காலம் வரை அங்குதான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், தனது தாய் தயாளு அம்மாவிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த தனது சொந்தங்களுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்தார். அவர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.