ஓசூர்: ஓசூரில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் குடைமிளகாயை சாலையில் கொட்டி செல்கின்றனர். ஓசூர் பகுதியில் தக்காளி, பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் ஆகியவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஓசூர் பகுதியில் குடைமிளகாய் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. குடைமிளகாய் நடவு செய்யப்பட்ட 90 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 3 முதல் 4 லட்சம் வரை செலவாகிறது. தற்போது ஓசூர் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட குடைமிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஓசூரில் இருந்து குடைமிளகாய் அனுப்ப முடியாததால் அவை டன் கணக்கில் தேக்கமடைந்துள்ளது. தேக்கமடைந்த குடை மிளகாயை விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக குடைமிளகாயை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் சாலையில் வீசினோம். நடப்பாண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ 40 முதல் 50 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ 10க்கும் குறைவாக விற்பனையாவதால், தேக்கமடைந்த குடை மிளகாயை சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.