சென்னை: சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால், தலைமை செயலகத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்திருந்த பொருட்களை அதிமுக அமைச்சர்கள் நேற்று காலி செய்தனர். அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும் தூக்கி சென்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்ள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக தோல்வி அடைந்ததையொட்டி, சபாநாயகர், துணை சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை காலி செய்யும் பணிகளில் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். அவர்களின் உதவியாளர்கள் பெரிய டெம்போ வேன்களை தலைமை செயலகத்திற்குள் எடுத்து வந்து, அறைகளை காலி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் அறைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைத்திருந்தனர். அந்த படங்கள் அனைத்தையும் எடுத்து சென்றனர்.
மேலும், அமைச்சர்கள் தங்கள் அலுவலக அறைகளில் பூஜை செய்வதற்கான தனியாக பொருட்களை வைத்திருந்தனர். அவற்றையும், அவர்கள் தங்கள் பயன்பாட்டுக்காக சொந்தமாக வைத்திருந்த பொருட்களையும் தூக்கி சென்றனர். அதேபோன்று முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலக அறைகளின் வாயிலில் அவர்களது பெயர் மற்றும் எந்த துறை அமைச்சர் என எழுதப்பட்ட பெயர் பலகை தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த பெயர் பலகை அனைத்தும் கழட்டி எடுக்கப்பட்டு, அதை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி வருகிற 7ம் தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. பதவியேற்றவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நேராக தலைமை செயலகத்திற்குதான் வருவார்கள். அப்போது, அவர்கள் அனைவருக்கும் தனித்தனி அலுவலக அறை ஒதுக்கப்பட வேண்டும். அந்த அறையின் வாயிலில் பெயர் பலகை பொருத்தப்பட வேண்டும். அதற்கான பணிகளை தலைமை செயலக ஊழியர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். தற்போதைய அமைச்சர்கள் அறையை காலி செய்ததால், அங்குள்ள குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியும் நேற்றே தொடங்கி விட்டது.
அதேபோன்று முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை, அடையார் கிரீன்வேஸ் சாலையில் தனித்தனி பங்களா வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளையும் தற்போதைய அமைச்சர்கள் காலி செய்ய தொடங்கினர். இதையடுத்து புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு அந்த பங்களா ஒதுக்கப்படும். அடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிகளையும் தோல்வி அடைந்த எம்எல்ஏக்கள் விரைவில் காலி செய்ய காலக்கெடு விதிக்கப்படும். அவர்கள் காலி செய்தபிறகு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அந்த விடுதியில் வீடு ஒதுக்கப்படும்.