சென்னை: திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மதுரை மத்திய தொகுதி என முக்கிய கோயில்கள் உள்ளடங்கிய தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலை மற்றும் முருகன் கோயில் அமைந்துள்ள திருத்தணி, திருச்செந்தூர், கும்பகோணம் (சுவாமிமலை), பழனி, உள்ளிட்ட நகரங்களில் திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல் ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ள மயிலாப்பூர், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதி, காஞ்சிபுரம், கும்பகோணம் என இந்துக்களின் ஆன்மிக தலங்கள் உள்ளடக்கிய தொகுதிகள் அனைத்திலும் திமுக அமோகமாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் இந்த வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில வாக்குறுதிகளும் முக்கிய காரணமாக விளங்குகிறது. கோயில்கள் புனரமைப்புக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களிலெல்லாம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். மேலும், இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் காசி, ராமேஸ்வரம், கேதர்நாத், பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வர ஆண்டுக்கு ஒரு முறை ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.