காரைக்குடி: சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி மற்றும் கடும் உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி தந்த மக்களுக்கு நன்றி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சி, கடும் உழைப்பால் வெற்றி கிடைத்துள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் திறமையான, செம்மையான அரசை அமைக்க வாழ்த்துக்கள். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
புதுச்சேரியில் வெற்றி பெறாதது பெரிய இழப்பு. கொரோனாவை எதிர்கொள்வது குறித்து சோனியாகாந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 13 எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் 2024ல் பாஜ ஆட்சியை நீக்கிவிட முடியும். தமிழகத்தில் பாஜ வளரக்கூடாது என நினைத்திருந்த நிலையில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது வருந்தத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.