சென்னை: ஓய்வு பெற்ற டிஜிபியின் கார் ஓட்டுநர், நீதிபதி பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். சென்னையை அடுத்த புழலை சேர்ந்த கமலநாதன் ஆயுதப்படை காவலராக இருந்தவர். 33 வயதாகும் கமலநாதன் கடந்த மாதம் 25ஆம் தேதி ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் ஓய்வு பெற்ற டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர்.
இதைப்போல எஸ்பி சிஐடி பாதுகாப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆவடியை சேர்ந்த சின்னக்கண்ணுவும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா பாண்டியனுக்கு கடந்த 6 வருடங்களாக பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
தமிழகத்தில் இன்று மேலும் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 19,112 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மொத்தம் 144 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 89 பேரும், தனியார் மருத்துவமனையில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.