சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தியிருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 159 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இசைப்புயல், ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.