சென்னை: சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்க உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் போதிய இடம், உபகரண வசதிகள், தடுப்பூசிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான நிதிச்சுமையில் தமிழகம் உள்ளது. இப்படி நெருக்கடியான சூழலில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார்.
இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக என கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் நற்பெயரை பெற்றுள்ளார். அவருக்கு கடந்த கால அனுபவங்கள் கை கொடுக்கும். அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு சிறப்பாக செயலாற்றி மக்கள் விரும்பும் நல்லாட்சியை மு.க.ஸ்டாலின் நிச்சயம் வழங்குவார். அவருடைய ஆட்சி திறம்பட செயல்பட சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் முழு ஆதரவை வழங்கும்.