சென்னை: காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த வெற்றி மூலம் 10வது முறையாக சட்டப் பேரவைக்குள் செல்கிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதன் முறையாக அவர் கடந்த 1971ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்பு, ராணிப்பேட்டை தொகுதியில் 1977, 1980ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 1984ம் ஆண்டு மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 1989-ல் காட்பாடியில் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்கிய துரைமுருகன் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வியிடம் துரைமுருகன் தோல்வியடைந்தார். பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றார். ஏற்கனவே 9 முறை காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் 10வது முறையாக இந்த தடவை மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 10வது முறையாக சட்டப் பேரவைக்குள் துரைமுருகன் மீண்டும் செல்வது குறிப்பிடத்தக்கது.