வேலூர்: பிளாஸ்டிக் அழிக்கும் இயந்திரங்கள் வேலூர், மாநகராட்சி, கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை உள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வாட்டர் பாட்டில், ஜூஸ் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்க கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் மூலமாக வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் நவீன இயந்திரம் வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் காட்சிப்பொருளாக மாறியது. எனவே பல லட்சத்தில் தனியார் நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அழிக்கும் இயந்திரத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.