தமிழக மக்களின் மீது வைத்திருந்த மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை மக்கள் உறுதி செய்துள்ளனர்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

2021-05-04@ 01:26:39

சென்னை: தமிழக மக்கள் மீது ஸ்டாலின் வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் உறுதி செய்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்  கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கிற வகையில் மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாக அமைந்ததால் நீண்டகாலமாக நல்லிணக்கமும், சரியான புரிதலோடும் செயல்பட்ட காரணத்தால் இன்றைக்கு 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது. தமிழகத்திற்கான விடியல் இன்று தொடங்கியிருக்கிறது. இந்த விடியலின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனைத்து பின்னடைவுகளுக்கும் தீர்வு காண்கிற வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் ஈடுபட வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற தோளோடு தோள் நின்று செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அனைவருக்கும் மனப்பூர்வமான
நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.