தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா? உயர் நீதிமன்றம் கேள்வி

2021-05-04@ 00:52:46

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறு தேர்தல் நடத்த சம்மதமா என்று இரு தரப்புக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த கவுன்சில் துணை விதி 13ன்படி, தேர்தலில் நிர்வாகி பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பு, 5 ஆண்டுக்குள் தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்க வேண்டும். படம் தயாரிக்காத உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால், திரைப்பட தயாரிப்பு எதுவும் மேற்கொள்ளாத ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது வெற்றியை எதிர்த்து தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்குள் நேரடியாக தமிழ் திரைப்படங்கள் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் தயாரிக்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், தலா ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் கவுன்சில் விதிகளை மீறி 3 பேரும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இந்த 3 பேரும் பதவிகளை வகிக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில், கவுரவ செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தலை நடத்த இரு தரப்பினருக்கும் சம்மதமா என்று கேட்டனர். இதற்கு பதில் அளிக்க வேண்டும். அதுவரை, பதவி வகிக்க தனி நீதிபதி விதித்த இடைக்கால தடை உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.