புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 2 கோடியை எட்டியது. 2வது நாளாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயமாக உள்ளது. இதற்கிடையே, 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கோரதாண்டவமாடி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக கடந்த 1ம் தேதி தினசரி பாதிப்பு உலகிலேயே முதல் முறையாக 4 லட்சத்தை கடந்தது. இதன் பின் நேற்று முன் தினம் சற்று குறைந்து 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு குறைந்து காணப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 லட்சத்து 147 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604 ஆக அதிகரித்தது. இது சில மணி நேரங்களிலேயே 2 கோடியை எட்டியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 2020 டிசம்பர் 19ம் தேதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை எட்டியது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி 1.50 கோடியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 14 நாளில் 50 லட்சத்துக்கும் அதிகமோனார் பாதிக்கப்பட்டு, 2 கோடி எட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக தினசரி பலி 3000க்கும் அதிகமாக இருந்து வருகிறது. மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 81.77 சதவீதமாக சரிந்துள்ளது.
* இந்திய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து, ஈரான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதனால் இந்தியர்கள் வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் தைவானும் இணைந்துள்ளது. இந்தியர்கள் யாரும் தைவான் வரக்கூடாது என தடை விதித்துள்ளது.
* பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
* ஒடிசாவில் நாளை முதல் வரும் 19ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
* ஆந்திராவில் நாளை முதல் பகல் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை
கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது. இதனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் நடந்தே சென்றனர். வேலைவாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்தது. இதனால், 2வது அலை படுபயங்கரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையிலும் இம்முறை தேசிய ஊரடங்கை பிறப்பிக்க மத்திய அரசு தயாராக இல்லை என உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் பொறுப்பிலேயே விட்டுவிடவே மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அந்தந்த மாநில நிலைமை பொறுத்து, மாநில அரசுகளே ஊரடங்கை விதிக்க வேண்டுமென்பதிலேயே மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.
* ஊரடங்கு விதிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘கொரோனா பரவல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, வைரஸ் தொற்று சங்கிலி தொடர்பை துண்டிக்கும் விதமாக, ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், வைரஸ் பரவுவதை தடுக்கவும் ஊரடங்கை அவசியமான பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். அடையாள சான்று இல்லை என்பதற்காக யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்காமல் இருக்கவோ மருந்து வழங்காமல் இருக்கவோ கூடாது. மேலும் ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி விலை, அவை கிடைக்கப் பெறுதல் குறித்து மத்திய அரசு தேசிய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது.