நெல்லை: முழு ஊரடங்கால் நெல்லையில் வெறிச்சோடிய சாலைகளில் சிறுவர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம்தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலை வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோன்ற பரபரப்பான சூழலில் பள்ளிகள் திறக்காத காரணத்தால், வாகனங்களின்றி வெறிச்சோடிய அந்த சாலையில் இரண்டு சிறுவர்கள் நடுரோட்டில் சைக்கிளை நிறுத்தி ஒருவரை ஒருவர் செல்போனில் படமெடுத்து மகிழ்ந்தனர்.