தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கோடை மழை!: வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி..!!
2021-05-03@ 15:29:22
தூத்துக்குடி!: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கோடை மழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கோடை மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரிப்பதுடன் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அரைமணி நேரம் சுமாரான மழை பெய்தது. இந்த திடீர் கோடை மழையால், வெப்பம் தணிந்து தூத்துக்குடியில் குளிர்ந்த காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ராமநாதபுரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாய் மாறியது. இந்த நிலையில் திடீரென அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. மேலும் ராமநாதபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களான பேராவூர், பழங்குளம், பட்டினம்காத்தான், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனிக்கரை மற்றும் அரண்மனை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணி அளவில் திடீர் கோடை மழை பெய்தது.
இதனால் நகரின் சாலைகள் மற்றும் கடை வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.