நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சேல்ஸ்மேன் வீட்டில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் முளையகோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45). வெளிநாட்டில் சேல்ஸ் மேன் வேலை செய்கிறார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இங்கேயே இருந்து வருகிறார். இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் அவரது வீட்டின் முன்பு பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் சிற்றவுட்டில் தீ எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது அங்கு பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில் உடைந்து கிடந்தது. இதனால் யாரோ மர்ம நபர்கள் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து எரிந்தது தெரியவந்தது. இது குறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக யாராவது வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.