தேனி: முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,021 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேனி மையத்தில் விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் இன்று அதிகாலை 5 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக மையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் இருந்து, வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் உடனிருந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்ற பொதுத்தேர்தலில வாக்களித்த, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, ஜனநாயக கடமை ஆற்ற பணித்திருப்பதை உணர்ந்து, வருங்காலத்தில் பணியாற்றுவோம்.புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள திமுகவுக்கும், முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிகிறேன். பொறுப்புகளை உணர்ந்து, அரசின் கடமைகளை முறையாக ஆற்ற வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்தார்.