ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 28ம் தேதி 45 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில், வட மாநில வாலிபர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாச்சல் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிசிஆர் பரிசோதனை செய்து, மருத்துவமனையிலேயே தங்க வைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் வட மாநில வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் கொரோனா வார்டுக்கு மாற்ற சென்றபோது, அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நேற்று மாலை 3 மணி முதல் வட மாநில வாலிபரை தேடி வந்தனர். மேலும், வட மாநில வாலிபர் மண்டலவாடி பகுதி சாலையோரம் நடந்த சென்றதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்டலவாடி பகுதியில் தேடிச்சென்றனர்.
தொடர்ந்து இரவு 9 மணியளவில் சின்னவேப்பம்பட்டு அருகே சென்றபோது, வடமாநில வாலிபர் நடந்து செல்வதை பார்த்து 108 ஆம்புலன்சை சுகாதாரத்துறையினர் நிறுத்தினர். இதைப்பார்த்த அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் வட மாநில வாலிபடை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொரோனா வாட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.